மிகவும் சந்தோஷமாக வண்ணவண்ண கனவுகளோடு சென்னைக்கு வந்தேன். சென்னை எனக்கு பல உண்மைகளை கற்றுக் கொடுத்தது. முதல் அனுபவமே எனக்கு அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியது.
கிராமத்தில் பிறந்ததால், யார் வீட்டுக்குப் போனாலும் தண்ணீர் தருவார்கள். எங்கே சென்றாலும் தண்ணீரை தானமாக தருவார்கள். தண்ணீர் பந்தல் என்று சாலை ஓரமாக மண் பானையில் வைத்திருப்பார்கள்.அதனால்தான் கிராமத்தில் பணத்தை தண்ணி மாதிரி செல்வு பண்ணாத என்பார்கள்.
எனக்கு முதல் அனுபவம் தண்ணியில்தான்.
நீங்கள் நினைப்பது போல டாஸ்மாக் தண்ணீயில் இல்லை. குடி நீரில்.
என்னை முதன்முதலில் செய்தி சேகரிக்க அனுப்புவதற்கு முன்பு பயிற்சிக்காக மூத்த நிருபர்களுடன் சென்று அந்த பகுதிகளை பார்த்துவிட்டு வருமாறு சொல்வார்கள். ஒரு நிருபர் என்னை பஸ்சில் வருமாறு சொல்லிவிட்டு போய்விட்டார்.
நானும் மயிலாப்பூர் டேங்க் அருகில் பஸ்க்காக காத்திருந்தேன். அலுவலகத்தில் நடந்து வந்ததால், தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க நினைத்து பக்கத்தில் இருந்த கடையில் தண்ணீர் கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்தார், கடைக்காரர். என்னுடைய வார்த்தைகளை வைத்து நம்மூர்காரன் என்று நினைத்தாரா என்ன என்பது எனக்குத் தெரியாது. ஒரு பாக்கெட்டில் தண்ணீர் கொடுத்தார். என்னக்கு ஓரே ஆச்சரியம். நம்ம ஊரில் தம்ளரில் தண்ணீர் தருவார்கள். இவர்கள் பாக்கெட்டில் தருகிறார்களே என்று. சுத்தமாக இருக்கட்டும் என்று தருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். தண்ணீரை குடித்துவிட்டு, அப்படியே கிள்ம்பினேன்.
கடைகாரர், "தம்பி தண்ணீருக்கு காசு கொண்டுங்க" என்றார்
எனக்கு தூக்கிவாரி போட்டது. தண்ணீருக்கு காசா. நான் முழிப்பதை பார்த்ததும் 'ஒரு பாக்கெட் தண்ணீர் ஒரு ரூபாய்' என்று சொன்னார்.
எனக்கு கிராமத்து நினைவு வந்தது.
சின்ன கிராமம் என்றாலும் குடிநீருக்கு கோடை காலத்தில் எங்கள் ஊரில் சிரமப்பட வேண்டியதிருக்கும். நான் கல்லூரி படிக்கும் காலத்தில் தண்ணீருக்காக கிணறு கிணறாக அலைந்திருக்கிறேன்.
எங்கள் ஊரில் நல்ல டேஸ்டான தண்ணீர் செல்வின் என்பவர் குடும்பது கிணற்றில் கிடைக்கும். அவர் எனக்கு தாத்தா முறை. அவர் தீவிர அதிமுககாரர். அவருடைய தந்தையும் என்னுடைய தந்தையும் நெருங்கிய நண்பர்கள். அதனால் எங்கள் இருவர் குடும்பத்துக்கும் அவரது குடும்பத்துக்கும் நெருங்கைய தொடர்பு உண்டு.
அவர்கள் கிணற்றில் நல்ல தண்ணீர் எடுக்க ஊரே போகும். கோடை காலம் வந்துவிட்டால், அவர்கள் பயிருக்கு தண்ணீர் கொடுக்க முடியாத அளவிற்கு ஊர்காரர்கள் தண்ணீரை வழித்து எடுத்துச் சென்றுவிடுவார்கள். இவர்களை கட்டுப்படுத்த வழியை அடைத்துப் பார்த்தார்கள். காவலுக்கு இருந்து பார்த்தார்கள். திட்டிப்பார்த்தார்கள். உஷும். பலனில்லை. கடைசியாக ஒரு வழியை கண்டுபிடித்தார்கள்.
ஒரு குடம் தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால், 25 பைசா தரவேண்டும் என்று சொல்லி வசூலிக்க ஆரம்பித்தார்கள். இந்த திட்டத்துக்கு கைமேல் பலன் கிடைத்தது. காசு கொடுத்து யாரும் தண்ணீர் எடுக்க தயாராக இல்லை.
கோடை காலம் முடிந்தது. தண்ணீர் பெருகியதும் காசு வசூலிப்பதை விட்டுவிட்டார்கள்.
சில வருடங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் வந்தது. தேர்தலில் செல்வின் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டார். உள்ளூர்காரரான எனக்கு நீங்கள் ஒட்டுப்போடுங்கள் என்று வீடு வீடாக சென்று கேட்டார். ஊர்காரர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக அவரை புறக்கணிக்க முடிவு செய்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்... குடிக்கிற தண்ணீருக்கே காசு கேட்டவனுக்கு எப்படி ஓட்டுப் போட முடியும் ... என்பதுதான்.
தேர்தலில் அவர் தோற்றுப் போனார். வடமலைப்பட்டியைச் சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவர் ஜெயித்தார். அவர் என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர்.
தண்ணீர் பாக்கெட்டுக்கு காசு கொடுத்த போது, செல்வின் ஞாபகம் தானாகவே எனக்கு வந்தது. ஒரு குடம் தண்ணீருக்கு 25 காசுக்கே இத்தனை பிரச்சனை செய்தார்கள். இங்கே 100மில்லி தண்ணீருக்கே ஒரு ரூபாய் கேட்கிறார்களே என்று தோன்றியது. தண்ணீருக்கு காசு கேட்கும் இந்த ஊரை விட்டுவிட்டு கிராமத்துக்கே போய்விடலாம் என்று தோன்றியது.காலம் ஓடிவிட்டது. பத்தாண்டுக்கு பிறகு ஊருக்கு போன போது சொன்னார்கள்... "பண்ணத்தை தண்ணீ மாதிரி பாத்து செல்வு பண்ணு." இனி ஒருவேளை செல்வின் பஞ்சாயத்து தலைவராகலாம். அப்போது தண்ணீர் ஒரு பிரச்சனையாக இருக்காது என்று எனக்குத் தோன்றியது.