Sunday, February 11, 2007

கருணாநிதியும்... விஜயகுமாரும்...



காவல்துறை அதிகாரிகளில் விஜயகுமாருக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு.
விரப்பனை அவர் சுட்டுக் கொன்றார் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. அவருடைய கம்பிரமும், எதையும் சரியாக செய்யும் தனித்தன்மையும் ஆளுமையும் மற்றவர்களை அவர் பக்கம் ஈர்க்கும்.
அவருடைய வெற்றிகள் பற்றி நான் பல முறை வியந்து பார்த்திருக்கிறேன். இவரால் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது என்று நினைத்திருக்கிறேன்.
2001ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதியை பேட்டியெடுக்க சிஐடி நகர் வீட்டுக்கு சென்றிருந்தேன். பேட்டி முடிந்ததும் நாட்டு நடப்புப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது, வெங்கடேசபண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட நேரம். அந்த சூடு தணியாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது. இந்த விஷயத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமாருக்கு கெட்ட பெயர் வர ஆரம்பித்த நேரம். அவரை மாற்ற வேண்டும் என்று நாடார் அமைப்புகள் எல்லாம் கோரிக்கை வைத்திருந்தார்கள்.
எங்களுடைய பேச்சு வெங்கடேசப்பண்ணையாரைப் பற்றியும், தென் மாவட்டங்களில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். நானும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால், கருணாநிதி ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் இருந்தது.
வெங்கடேசப்பண்ணையார் என்கவுண்டர் விஷயத்தில் கமிஷனர் விஜயகுமார் தவறு செய்துவிட்டார் என்று நான் சொன்னேன். விஜயகுமார் பற்றி சொன்னதும், கருணாநிதி ஒரு விஷயத்தை நினைவுபடுத்தி சொன்னார்.
''அந்தம்மாக்கிட்ட அவர் செக்யூரிட்டி ஆபிசரா 91-96 வரை இருந்தார். 96ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், அவருக்கு தென் மண்டல ஐஜி பதவி கொடுத்தேன். அவரும் சிறப்பாக பணியாற்றினார். ஆனால், சில மாதங்களில் பாடர் செக்யூரிட்டி போர்சுக்கு போக அனுமதி கேட்டு என்னை சந்தித்தார். நானும் அனுப்பி வைக்க சம்மதித்தேன்.
தமிழகத்தில் இருந்து அவர் டெல்லி செல்வதற்கு முன் என்னை சந்திக்க வந்தார். 'நான் சில காலம் அவர்களிடம் பாதுகாப்பு அதிகாரியா இருந்தேன். இப்ப டெல்லி போறதுக்கு முன்னாடி அவங்களை சந்திச்சு சொல்லிட்டு போகனுமுன்னு நினைக்கிறேன். நீங்க அனுமதி கொடுக்கனும்' என்று கேட்டார். நானும் தாராளமா போயிட்டு வாங்கன்னு சொன்னேன். அந்த அம்மையாரை பார்த்துட்டுத்தான் டெல்லி போனார்.
அவர் திரும்பவும் சென்னை போலீஸ் கமிஷனரா வந்ததும், மறக்காம எனக்கு போன் செய்தார். 'நான் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரா பதவி ஏற்க போறேன். உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்' என்று கேட்டார். இத்தனை நேர்மையான அதிகாரியை பார்க்க முடியாது என்று மனசு விட்டு பாராட்டினார். விரப்பனை சுட்ட உடன் கருணாநிதிக்கு போன் செய்து தகவல் சொன்னார் என்றும் சொல்லுவார்கள்.
ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அதிகாரி என்பதால், அவருக்கு திமுக அரசில் நல்ல பொறுப்பு கிடைக்காது என்ற கருத்து உள்ளது. இப்போது கூட அவர் சட்டம் ஒழுங்கு தொடர்பான எந்த பணியிலும் இல்லை.
இரண்டு பெரிய தலைவர்களிடமும் நல்ல பெயரோடு இருக்க ஒருவரால் முடியும் என்றால், அது அவரது நேர்மையால் கிடைத்த வெற்ற்றியாகத்தான் இருக்க முடியும்.
குறிப்பு
தமிழகத்தில் ஆண்டுதோறும் எந்த பதவிக்கும் தகுதியானவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்படுவது உண்டு. ஏனெனில் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வந்துவிடும். இது போன்ற பட்டியலில் கடந்த 2005ம் ஆண்டு 25 போலீஸ் அதிகாரிகள் இருந்தனர். 2006ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 11ஆக குறைந்து போய்விட்டது. இந்த ஆண்டு எவ்வள்வு குறைகிறதோ தெரியவில்லை.