
இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 18 வருடம் எனக்கும் ஏக்நாத்துக்குமான நட்பு நீடித்துக் கொண்டே இருக்கிறது. முதலில் அவனை பார்க்கும் போது இருந்த ஈர்ப்பும், பிரமிப்பும் இப்போதும் தொடர்கிறது.
கவிதை மூலம் எனக்கு அறிமுகமானவன், ஏக்நாத். நானும் அவனும் ஓரே கல்லூரியில், அவன் தமிழும், நான் கணிதமும் படித்தோம். இருவரும் ஓரே பஸில்தான் பயணம் செய்ய வேண்டும்.
எங்கள் எல்லோரையும் விட கலராகவும், அந்த நிறத்துக்கு ஏற்றார் போல உடைகளும் அணிந்து வருவான். பஸ்சில் வரும் பெண்கள் எல்லாம் அவனிடம் பேசவே ஆர்வம் காட்டுவார்கள். ஆழ்வார்குறிச்சியில் இருந்துதான் நிறைய பெண்கள் கல்லூரிக்கு வருவார்கள். அவர்கள் அனைவருமே அவனுடன் பள்ளியில் படித்தவர்கள் என்பது எனக்கு பின்னால்தான் தெரிய வந்தது.
அவனுடைய பெயரும், அவனுடைய நடவடிக்கைகளும் வித்தியாசமாக இருக்கும். ஆரம்ப நாட்களில் அவனிடம் அதிகம் பேசியது கிடையாது. ஒரு முறை வார மலரில் ஏக்நாத்தின் கவிதை ஒன்று வெளியாகி இருந்தது. பத்திரிகையில் பெயர் வந்தால் பெரிய விஷயமாக நினைத்த காலம் அது. கவிதையே வந்துவிட்டது என்றால் சொல்லவா வேண்டும். ஊரில் எல்லோரிடமும், என் கல்லூரியில் என்னுடன் படிக்கும் நண்பன்(அதுவரையில் அவனிடம் பேசியதே இல்லை) என்று தம்பட்டம் அடித்து பெருமை பட்டுக் கொண்டேன்.
அடுத்த நாள் கல்லூரிக்கு போகும் போது பஸ்சிலேயே கவிதை நன்றாக இருந்தது என்று பாராட்டினேன். அதுதான் நாங்கள் இருவரும் பேசிக் கொண்ட முதல் நிகழ்வு. அதற்கு பின்பு, எங்களின் நட்பு, பஸிலும், ஆற்றங்கரையிலும் செழித்து வளர்ந்தது.
நான் சென்னைக்கு வேலை கிடைத்து வந்துவிட்டேன். அப்போதும் எங்களின் நட்பு தொடர்ந்தது. பின்னர் அவன் நாகப்பட்டினத்தில் இறால் பண்ணையொன்றில் வேலை பார்த்து வந்தான். அங்கிருந்தபடியே கவிதை புத்தகம் ஒன்றை வெளியிட்டான். அதை எனக்கும் அனுப்பி வைத்தான்.
பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு, சேவியர் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் படிக்க சென்றான். அப்போதும் எனக்கு கடிதம் எழுதுவான். நான் ஊருக்கு செல்லும் போது, அவனை கண்டிப்பாக பார்த்துவிட்டு வருவேன்.அவன் படித்து முடித்ததும், சென்னையில் வேலை தேடி வருகிறேன் என்று சொன்னான். நான் என்னோடு தங்கிக் கொள் என்று அழைத்து வந்தேன். அவன் வேலையில்லாமல் கஷ்டப்பட்ட போது இரண்டு பேரும், 5 ரூபாய்க்கு ரோட்டோர இட்லி கடையில் சாப்பிட்டு பொழுதை கழித்து, இன்று இருவரும் நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்க்கிறோம்.
ஓரே அறையில் இருந்த போது, அவன் எழுதிய பல கவிதைகளுக்கு முதல் வாசகனாக நான் இருந்திருக்கிறேன். இப்போதும் அவன் சினிமாவில் பாட்டு எழுதியதும், அவ்வப்போது முழுப்பாடலையும் சொல்லி மகிழ்வான். அவனுடைய கவிதைகளில் எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதில் ஒரு கவிதை என்னால் மறக்கவே முடியாது. நீங்கள் படித்தால் நீங்களும் மறக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.
அந்த கவிதை...
உன் சாயலில் இருக்கும் எல்லா
பெண்களிடமும் பேசிவிடுகிறேன்...
ஆழ்வார்குறிச்சி தேரோட்டத்தில்
உன்னைப் போலவே தெரிந்த பெண்ணிடம்
பேச நினைக்கையில்...
அது நீயாகவே இருந்தாய்
பேசாமலெயே திரும்பினேன்...
அவன் அனுபவித்து எழுதிய கவிதையை நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment