Monday, January 14, 2008

சொல்லுற விதத்தில் சொன்னால்...

பெரியவர்களுடம் பேசிக் கொண்டு இருப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும். அவர்களிடம் இருந்து ஏதாவது நல்ல விஷயங்களை நம்மால் கற்றுக் கொள்ள முடியும். சிறுவயதில் இருந்தே இந்த பழக்கம் என்னிடம் உண்டு. ஊரில் என் தந்தையை பார்க்க வருபவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, அருகில் அமர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பேன். இந்த பழக்கம் இப்போதும் தொடர்கிறது.
சமீபத்தில் எனது ஆசிரியர் கதிர்வேல் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது ஒரு தகவல் சொன்னார். அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அமெரிக்க தேர்தலில் கென்னடி போட்டியிடும் போது, அவருடைய விளம்பரத்தை வெளியிடும் குழு கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய நாள்தான், போஸ்டரில் என்ன படம் போடுவது என்று பேசி இறுதி செய்து பிரிண்டிங் செய்ய அனுப்பியிருந்தார்கள். பல மில்லியன் படங்கள் பிரிண்டிங் செய்ய ஆடர் கொடுத்திருந்தனர்.
பேசிக் கொண்டு இருந்த போதுதான், ஒருவர் அந்த படத்துக்காக காப்பிரைட் எவ்வளவு டாலருக்கு பேசினாய் என்று கேட்க அப்போதுதான் அவர்களுக்கு அந்த தவறு புரிந்தது. அந்த படத்துக்கான காப்பி ரைட் பேசப்படவில்லை என்பது. உடன் என்ன செய்வது என்று அனைவரும் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டு இருந்தனர். ஏனென்றால், படம் வெளியான பின்னர், சம்பந்தப்பட்ட நபர் வழக்குப் போட்டால் பிரச்சனையாகிவிடும். அவர் நஷ்டைஈடு கேட்டு வழக்குப் போட்டால், நம்மிடம் வசூலான தேர்தல் நிதியை விட அதிகம் கேட்பான். எப்படி சமாளிப்பது என்று தீவிரமாக ஆலோசித்துக் கொண்டு இருந்தனர். நள்ளிரவு தாண்டியும் ஆலோசனை தொடர்ந்தது.
அந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் வெளியூர் சென்று விட்டு நள்ளிரவுக்கு பின்னர் உள்ளே வந்தார். அனைவரும் அமர்ந்து தீவிரமாக ஆலோசித்துக் கொண்டு இருப்பதைப் பார்தது, என்ன என்று விசாரித்தார். அவர்கள் விபரத்தைச் சொன்னதும், சிறிது நேர யோசனைக்குப் பின்னர் அவர் சொன்னார், 'ஒன்று செய்யுங்கள். சம்பந்தப்பட்ட புகைப்படக்காரருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். கென்னடியின் தேர்தல் விளம்பரத்துக்கு பயன்படுத்த பல்வேறு நபர்களிடம் இருந்து புகைப்படங்கள் வந்தது. அந்த படங்களை விட உங்கள் படம் நன்றாக இருப்பதாக எங்கள் குழுவினர் கருதுகின்றனர். உங்களுக்கும் நல்ல விளம்பரம் கிடைக்கும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேளுங்கள்' என்று சொன்னார்.
அவர் சொன்னபடியே சம்பந்தப்பட்ட புகைப்படக்காரருக்கு கடிதம் அனுப்பினர்கள். கடித்தைப் படித்ததும், அவர் 'எனக்கு சம்மதம். நான் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார். உடன் 'நீங்கள் உங்கள் படத்தை பயன்படுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுங்கள். இப்போது நேரம் குறைவாக இருப்பதால், உங்களுக்கு கிரிடிட் கொடுக்க முடியவில்லை. அடுத்து பிரிண்ட் செய்யும் போது, உங்களுக்கு கிரிடிட் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அவரும் அனுமதி கடிதம் கொடுத்தார்.
ஒரு பைசா செலவில்லாமல், பிரச்சனையும் இல்லாமல் அந்த படத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இதற்கு அவர் சரியான நேரத்தில் சொன்ன யோசனைதான் காரணம். இதில் இருந்து தெரிவது என்னவென்றால், சொல்லும் விதத்தில் சொன்னால் யாரையும் எளிதில் சம்மதிக்க வைக்க முடியும் என்பதுதான்.

Sunday, January 13, 2008

மும்பையும்... புத்தாண்டு கொண்டாட்டமும்...

புத்தாண்டு அன்று மும்பையில் நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், அதிர்ந்து போனேன்...
சமீபத்தில்தான் மும்பை செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மும்பை டான்கள் பற்றியும், தாவூத் இப்றாஹிம் பற்றியுமே கேள்விப்பட்ட எனக்கு, இன்னொரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நான் ஒரு மாலை பொழுதில்தான் மும்பை சென்று சேர்ந்தேன். மும்பையில் யாரையும் எனக்குத் தெரியாது. சென்னையில் உள்ள நண்பர் ஒருவர் மூலமாக, மும்பையில் உள்ள பத்திரிகையாளர் அர்ஜூனை தொடர்பு கொண்டேன். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 20 வருடங்கள் அங்கு பத்திரிகையில் இருக்கிறார். அவருடன் ஷாப்பிக் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், அந்த நண்பரை நீண்ட நேரம் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியாக இரவு பத்து மணிக்குத்தான் அவரை சந்திக்க முடிந்தது.
அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் என்னை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். பக்ரித் பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்த நேரம் என்பதால், முஸ்லிம்கள் மார்க்கெட் ஒன்று இருக்கிறது. அங்கு சகலத்தையும் நீங்கள் இந்த நேரத்தில் வாங்கலாம் என்று என்னை அழைத்துச் சென்றார். தாராவியில் இருந்து நாங்கள் அந்த மார்க்கெட்டுக்கு சென்றோம்.
இரவு நேரம் என்பதால், எந்த பாதை என்பது எனக்கு தெரியல்வில்லை. ஆனாலும் அவர் அழைத்துச் சென்ற போது, நள்ளிரவை நெருங்கிக் கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் பேருந்து நிலையங்களில் பெண்கள் தன்னந்தனியாக பேருந்துக்காக காத்துக் கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். இந்த நேரத்தில் பெண்கள் தனியாக இருக்கிறார்களே... தாதாக்கள் ரவுடிகள் நிறைந்த இந்த ஊரில் இவர்களுக்கு பிரச்சனை எதுவும் ஏற்படாதா...
எனக்குள் தோன்றிய கேள்வியை அர்ஜுனிடம் கேட்டேன். அவர் சிரித்தார்... "இங்கே இது சகஜம்... இங்கேயாவது ஒருவர் இருவர்தான் நிற்கிறார்கள். ரயில் நிலையத்தில் பாருங்கள் எவ்வளவு பேர் தனியாக இருக்கிறார்கள் என்று... யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது" என்றார்.
"எப்படி இது சாத்தியம்..."
"இங்கே செக்ஸ் தொழிலாளர்களுக்கென தனியாக இடம் இருக்கிறது. அங்கே விபச்சாரம் அங்கிகரிக்கப்பட்ட தொழிலாக உள்ளது. இங்குள்ள தாதாக்கள், காமமூகர்கள் தாங்கள் தாகத்தை அங்கு சென்று தணித்துக் கொள்கிறார்கள். இதனால் பொது இடங்களில் பெண்கள் சாதாரணமாக நடனமாட முடிகிறது"
நான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் போது இரவு 2 மணி. ரயிலில் பெண்கள் தனியாக வந்து போவதையும் பார்க்க முடிந்தது. அப்போது என் மனதில் தோன்றியது இதுதான். நள்ளிரவில் ஒரு பெண் தன்னந்தனியாக உடல் முழுவதும் நகைகளுடன் செல்கிறாளோ... அன்றைக்குத்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று காந்தி சொன்ன சுதந்திரம் மும்பைக்கு வந்துவிட்டது. சென்னைக்கு எப்போது வரும் என்று ஏக்கத்துடன் சென்னை திரும்பினேன்.
அன்றைக்கு நான் நினைத்தது தவறோ என்று நினைக்கும் அளவுக்கு புத்தாண்டு அன்று மும்பையி்ல் அந்த சம்பவம் நடந்துவிட்டது. புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மிருகத்தனமாக இரண்டு இளம் பெண்களை 80 பேர் சேர்ந்து படுத்திய கொடுமையை என்னவென்று சொல்லுவது. அப்பப்பா... நினைக்கவே நெஞ்சு வெடிக்கிறது. பாவம் அந்த பெண்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்... நாம் மீண்டும் காட்டு்மிராண்டி காலத்துக்கு சென்று கொண்டு இருக்கி்றோமோ என்று நினைக்கத் தூண்டுகிறது.
முக்கை தொடாத வரையில்தான் சுதந்திரம் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை என்றால் தெரிந்து கொள்ள வேண்டியது வரும்.