பெரியவர்களுடம் பேசிக் கொண்டு இருப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும். அவர்களிடம் இருந்து ஏதாவது நல்ல விஷயங்களை நம்மால் கற்றுக் கொள்ள முடியும். சிறுவயதில் இருந்தே இந்த பழக்கம் என்னிடம் உண்டு. ஊரில் என் தந்தையை பார்க்க வருபவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, அருகில் அமர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பேன். இந்த பழக்கம் இப்போதும் தொடர்கிறது.
சமீபத்தில் எனது ஆசிரியர் கதிர்வேல் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது ஒரு தகவல் சொன்னார். அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அமெரிக்க தேர்தலில் கென்னடி போட்டியிடும் போது, அவருடைய விளம்பரத்தை வெளியிடும் குழு கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய நாள்தான், போஸ்டரில் என்ன படம் போடுவது என்று பேசி இறுதி செய்து பிரிண்டிங் செய்ய அனுப்பியிருந்தார்கள். பல மில்லியன் படங்கள் பிரிண்டிங் செய்ய ஆடர் கொடுத்திருந்தனர்.
பேசிக் கொண்டு இருந்த போதுதான், ஒருவர் அந்த படத்துக்காக காப்பிரைட் எவ்வளவு டாலருக்கு பேசினாய் என்று கேட்க அப்போதுதான் அவர்களுக்கு அந்த தவறு புரிந்தது. அந்த படத்துக்கான காப்பி ரைட் பேசப்படவில்லை என்பது. உடன் என்ன செய்வது என்று அனைவரும் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டு இருந்தனர். ஏனென்றால், படம் வெளியான பின்னர், சம்பந்தப்பட்ட நபர் வழக்குப் போட்டால் பிரச்சனையாகிவிடும். அவர் நஷ்டைஈடு கேட்டு வழக்குப் போட்டால், நம்மிடம் வசூலான தேர்தல் நிதியை விட அதிகம் கேட்பான். எப்படி சமாளிப்பது என்று தீவிரமாக ஆலோசித்துக் கொண்டு இருந்தனர். நள்ளிரவு தாண்டியும் ஆலோசனை தொடர்ந்தது.
அந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் வெளியூர் சென்று விட்டு நள்ளிரவுக்கு பின்னர் உள்ளே வந்தார். அனைவரும் அமர்ந்து தீவிரமாக ஆலோசித்துக் கொண்டு இருப்பதைப் பார்தது, என்ன என்று விசாரித்தார். அவர்கள் விபரத்தைச் சொன்னதும், சிறிது நேர யோசனைக்குப் பின்னர் அவர் சொன்னார், 'ஒன்று செய்யுங்கள். சம்பந்தப்பட்ட புகைப்படக்காரருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். கென்னடியின் தேர்தல் விளம்பரத்துக்கு பயன்படுத்த பல்வேறு நபர்களிடம் இருந்து புகைப்படங்கள் வந்தது. அந்த படங்களை விட உங்கள் படம் நன்றாக இருப்பதாக எங்கள் குழுவினர் கருதுகின்றனர். உங்களுக்கும் நல்ல விளம்பரம் கிடைக்கும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேளுங்கள்' என்று சொன்னார்.
அவர் சொன்னபடியே சம்பந்தப்பட்ட புகைப்படக்காரருக்கு கடிதம் அனுப்பினர்கள். கடித்தைப் படித்ததும், அவர் 'எனக்கு சம்மதம். நான் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார். உடன் 'நீங்கள் உங்கள் படத்தை பயன்படுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுங்கள். இப்போது நேரம் குறைவாக இருப்பதால், உங்களுக்கு கிரிடிட் கொடுக்க முடியவில்லை. அடுத்து பிரிண்ட் செய்யும் போது, உங்களுக்கு கிரிடிட் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அவரும் அனுமதி கடிதம் கொடுத்தார்.
ஒரு பைசா செலவில்லாமல், பிரச்சனையும் இல்லாமல் அந்த படத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இதற்கு அவர் சரியான நேரத்தில் சொன்ன யோசனைதான் காரணம். இதில் இருந்து தெரிவது என்னவென்றால், சொல்லும் விதத்தில் சொன்னால் யாரையும் எளிதில் சம்மதிக்க வைக்க முடியும் என்பதுதான்.