Monday, August 02, 2010

வீடு தேடி வரும் வில்லன்கள்!ஷாக் தொடர்


குற்றங்கள் மலிந்து விட்டன. குற்றவாளிகள் சிலரில் இருந்து பலர் ஆகி விட்டார்கள். அகத்தின் அழகு இப்போதெல்லாம் முகத்தில் தெரிவதில்லை. சிரித்த முகத்தோடு, தான் செய்த கொலையை விவரித்து, வாக்குமூலம் கொடுக்கும் ஜென்டில்மேன் கள் நமக்கு மிகவும் பழகிய முகங்களாகி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் வில்லத்தனத்தோடு, படிக்கிற வயதில் பக்காவாக கொலை செய்கிறான் மாணவன். யாரையோ அல்ல. கூடவே இருந்து சமைத்துப் போட்ட அத்தையை. பத்தாம் வகுப்பிலேயே பள்ளி கழிவறையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்து குழந்தையை வீசி எறிகிறாள் மாணவி. வீட்டில் யாருக்கும் தெரியாதாம். உறவும் சரி, ஊரும் சரி.. எதையுமே நம்ப முடியவில்லை.. வீட்டோடு பிள்ளையாக வளரும் கார் டிரைவர், கடத்தல் வேலை பார்க்கிறான்.. பால்காரன், பேப்பர்காரனை பார்த்தால் பயமாக இருக்கிறது. கொலைக்கும் கொள்ளைக்கும் துப்புக் கொடுக்கும் உளவு வேலையில் இவர்கள் கிரிமினல்கள் ஆகி விட்டார்கள். பத்துப் பாத்திரம் தேய்ப்பவள் பல கொள்ளைகளில் பக்கபலமாக இருக்கிறாள். அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிய வறுமை குற்றவாளிகள் இப்போது சில, பல லகரங்களுக்கு ஆசைப்பட்டு கொலை செய்ய கற்றுக் கொண்டு விட்டார்கள். கூலிப்படை ரேஞ்சுக்கு அந்தஸ்து பெற்ற கும்பலும் இதில் அடங்கும்.இந்த ஷாக் தொடரின் நோக்கம், யாருக்கும் தெரியாத குற்றங்களை தேடுவதல்ல.. நம்மில் கலந்து நிற்கும் நயவஞ்சகர்களின் வில்லத்தனங்களை தோலுரிப்பதுதான். வீடு தேடி வந்து, வீட்டுக்குள்ளேயே இருந்து, நம்ப வைத்து நாசம் செய்யும் சில வில்லன்கள் பற்றி இந்த தொடர் விவரிக்கும். வில்லன்கள் வளைக்கப்பட்ட விதம் பற்றி அவ்வப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர், வாசகர்களிடையே தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.இதோ, பீட்சா வில்லன் அறிமுகம்! எம்.ஏ. படித்தவன். பள்ளிப் பருவத்திலேயே ரேஸ் பைக் ஓட்டுவதில் அலாதி பிரியம். ரொமான்சுக்கு பஞ்சம் இல்லை. தனக்குப் பிடித்த வேலையாக, அவன் தேர்ந்தெடுத்தது, பீட்சா சேல்ஸ்மேன். ஆர்டரின் பேரில் வீட்டுக்கே சென்று டெலிவரி செய்யும் வேலை. டிப்ஸ் பிளஸ் சம்பளம் அவனுக்கு போதுமானதாக இருந்தது. குமட்டல் மணம், தூக்கலான உப்பு, கசந்த காரத்துடன் கலர் கலரான கவரில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ்க்கு குழந்தைகள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். நூடுல்ஸ், பர்கர், பீட்சா என்றால் போதும்.. மம்மி, டாடியையே சிறிது நேரம் மறக்கும் அளவுக்கு இன்றைய இளைய தலைமுறை இருக்கிறது. பீட்சா பிரியத்தில், ஒரு வில்லனிடம் வீணான மாணவியின் சோகம் இங்கே...தனது மகளைக் காணோம் என்றதும், பதறிப் போனார் அந்த தந்தை. தனக்கு நெருக்கமான அந்த அமைச்சரை உடனே போனில் அழைத்து விவரத்தை சொன்னார். போலீஸ் படை களமிறக்கப்பட்டது.மகளை தேடிய அந்த தந்தைக்கு, சென்னையின் இதயம் போன்ற பகுதியில் பங்களா. பெரிய இடத்து சமாசாரம் என்பதால் எந்த ஸ்டேஷன் லிமிட்டில் உங்கள் வீடு வருகிறது என்றெல்லாம் போலீசார் கேள்வி கேட்கவில்லை. தேடுதல் வேலை தீவிரமானது.பங்களாவில் மகள் இருந்த அறையை முழுக்க அலசினார்கள். டிரைவர், வாட்ச்மேன், சமையல்காரன் என எல்லோரையும் லேசாக தட்டிப் பார்த்தார்கள். இப்போதெல்லாம் போலீசுக்கு துப்பு கொடுப்பது செல்போன் மட்டும்தானே. அதை நாடினார்கள். மகளின் லேட்டஸ்ட் போன் பில்லை எடுத்தார்கள். சில நம்பர் சந்தேகமாக இருந்தன. ஒரு நம்பருக்கு போன் செய்த போது, அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. சந்தேகம் வலுத்தது. அந்த நம்பருக்கான முகவரியை போலீசார் டிரேஸ் செய்தனர். கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டின் மாடியில் போய் நின்றது போலீஸ். ஹவுஸ் ஓனர் சொன்னார். ‘‘சார்.. நேத்துதான் அந்தப் பையன் ரூமைக் காலி பண்ணிட்டு ஊருக்கு போனான். நாகர்கோவிலுக்கு பக்கத்துல அவன் ஊர். படிச்சுருக்கான். பிரபலமான பீட்சா கடைல வேலை செய்றான். என்ன பிரச்னைனு தெரியல. திடுதிப்னு காலி பண்ணிட்டு போய்ட்டான். மத்தபடி அவன் நல்ல பையன்தான்’’ என்று மூச்சு விடாமல் பேசி முடித்தார். போலீசாருக்கு புரிய ஆரம்பித்தது. பெரிய இடத்து மாணவி, நாகர்கோவிலுக்கு பீட்சா பையனோடு கிளம்பிருச்சுங்கிறது தெரிந்தது. பித்துப் பிடித்து வீட்டில் முடங்கியிருந்த அந்த தந்தைக்கு தகவல் சொல்லப்பட்டது. பதறியவர், மெல்ல நிதானத்துக்கு வந்தார். வீட்டில் இருந்த சூழ்நிலையே, அவரது மகளுக்கு இப்படி ஒரு அவலம் நேரக் காரணம் என்பதை ஒப்புக் கொண்டார்.ஆபீஸ்.. வீடு.. இதைத் தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அவருடைய மனைவியும் படித்தவர். தனியார் நிறுவனத்தில் வேலை. மாதர் சங்கங்கள், கிளப்களில் ஈடுபாடு. ஒரே மகள். செல்லமாக வளர்த்திருக்கிறார்கள்.எல்லோர் வீட்டிலும் மாதிரி, கேட்டதை வாங்கிக் கொடுத்து செல்லமாக வளர்த்தார்கள். ஸ்கூலுக்கு போய்விட்டு வந்து அவளே சாப்பாடு எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொள்வது, வெளியே செல்ல ஆட்டோவை அழைப்பது, கால் டாக்சியை கூப்பிடுவது என எல்லாமே அவளுக்கு கற்றுத் தந்திருந்தார்கள்.பீட்சா, பர்கர் என தான் விரும்பியதை அவளே டயல் செய்து வரவழைப்பாள். அப்படி வீட்டுக்கு வந்த ஒரு பீட்சா பாய்தான், இன்றைக்கு ஒரு வீட்டின் நிம்மதியையே சீர்குலைத்து விட்டான். பீட்சாவோடு சேர்த்து, மெல்ல மெல்ல ரொமான்சையும் கடைவிரித்து அவள் மனதைக் கலைத்து விட்டான்.பீட்சா வில்லனைத் தேடி நாகர்கோயில் போனது போலீஸ் படை. சொந்த ஊரில் அவன் அம்மாவும் அப்பாவும் மட்டுமே இருந்தனர். அவர்கள் இருவரும் அவன் இங்கே வரவே இல்லை என்று சாதித்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, ‘நேற்று ஒரு பெண்ணோடு வந்தான், சார்...’ என்று சொன்னார்கள்.அவன் பெற்றோரை ‘முறையாக’ போலீசார் விசாரிக்க, கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக சொன்னார்கள். இருவரையும் கொத்தாக அள்ளிக் கொண்டு போலீஸ் சென்னை திரும்பியது.காதல் மோகத்தில் அந்த பெண் பெற்றோருடன் திரும்பிவர மறுத்தாள். அவளின் பிடிவாதத்தைப் பார்த்து போலீசே அதிர்ந்து போனது. மேலிடத்து உத்தரவாயிச்சே... அவனை துவைத்து விசாரிக்க ஆரம்பித்தனர்.அவன் வாய் திறந்ததில், போலீசார் விக்கித்துப் போனார்கள்.சென்னையில் நிறைய பீட்சா கடைகளில் வேலை பார்த்து விட்டேன். பணக்கார வீடுகளில் இருந்துதான் பெரும்பாலும் அழைப்பு வரும். அதிலும், குறிப்பாக சின்ன வயதுப் பெண்கள்தான் போன் செய்து பீட்சா, பர்கர் என்று ஆர்டர் கொடுப்பார்கள். அதை எடுத்துச் செல்லும் போதே அவர்கள் வீட்டையும், வீட்டில் உள்ளவர்கள் பற்றியும் நோட்டம் போடுவேன். இளம் பெண்கள் யாராவது பீட்சா ஆர்டர் செய்தால், அடுத்த முறை என்னிடமே நேரடியாக ஆடர் கொடுங்கள் என்று சொல்லி என்னுடைய மொபைல் நம்பரை கொடுத்துவிட்டு வருவேன். இரண்டு மூன்று நாட்களாகியும், அந்த பெண் பேச வில்லை என்றால், நானே போன் செய்து ‘பீட்சா வேணுமா?’ என்று கேட்பேன். அதன் பிறகு அந்த பெண்களோடு மெல்ல மெல்ல பழகுவேன். அவர்கள் எந்த நேரத்தில் தனியாக இருப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவர்களிடம் போனில் அரட்டை அடிப்பேன். பிறகு காதல் வலை விரிப்பேன். வலையில் விழும் பெண்கள, நைசாக பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பேன். வீட்டில் இருந்து வெளியே வரும் பெண்களை சொந்த கிரமத்துக்கு அழைத்துச் செல்வேன். என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்துவேன். பின்னர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு கேரளா சென்று விடுவேன். அந்த பெண்ணிடம்,

Monday, January 14, 2008

சொல்லுற விதத்தில் சொன்னால்...

பெரியவர்களுடம் பேசிக் கொண்டு இருப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும். அவர்களிடம் இருந்து ஏதாவது நல்ல விஷயங்களை நம்மால் கற்றுக் கொள்ள முடியும். சிறுவயதில் இருந்தே இந்த பழக்கம் என்னிடம் உண்டு. ஊரில் என் தந்தையை பார்க்க வருபவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, அருகில் அமர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பேன். இந்த பழக்கம் இப்போதும் தொடர்கிறது.
சமீபத்தில் எனது ஆசிரியர் கதிர்வேல் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது ஒரு தகவல் சொன்னார். அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அமெரிக்க தேர்தலில் கென்னடி போட்டியிடும் போது, அவருடைய விளம்பரத்தை வெளியிடும் குழு கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய நாள்தான், போஸ்டரில் என்ன படம் போடுவது என்று பேசி இறுதி செய்து பிரிண்டிங் செய்ய அனுப்பியிருந்தார்கள். பல மில்லியன் படங்கள் பிரிண்டிங் செய்ய ஆடர் கொடுத்திருந்தனர்.
பேசிக் கொண்டு இருந்த போதுதான், ஒருவர் அந்த படத்துக்காக காப்பிரைட் எவ்வளவு டாலருக்கு பேசினாய் என்று கேட்க அப்போதுதான் அவர்களுக்கு அந்த தவறு புரிந்தது. அந்த படத்துக்கான காப்பி ரைட் பேசப்படவில்லை என்பது. உடன் என்ன செய்வது என்று அனைவரும் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டு இருந்தனர். ஏனென்றால், படம் வெளியான பின்னர், சம்பந்தப்பட்ட நபர் வழக்குப் போட்டால் பிரச்சனையாகிவிடும். அவர் நஷ்டைஈடு கேட்டு வழக்குப் போட்டால், நம்மிடம் வசூலான தேர்தல் நிதியை விட அதிகம் கேட்பான். எப்படி சமாளிப்பது என்று தீவிரமாக ஆலோசித்துக் கொண்டு இருந்தனர். நள்ளிரவு தாண்டியும் ஆலோசனை தொடர்ந்தது.
அந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் வெளியூர் சென்று விட்டு நள்ளிரவுக்கு பின்னர் உள்ளே வந்தார். அனைவரும் அமர்ந்து தீவிரமாக ஆலோசித்துக் கொண்டு இருப்பதைப் பார்தது, என்ன என்று விசாரித்தார். அவர்கள் விபரத்தைச் சொன்னதும், சிறிது நேர யோசனைக்குப் பின்னர் அவர் சொன்னார், 'ஒன்று செய்யுங்கள். சம்பந்தப்பட்ட புகைப்படக்காரருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். கென்னடியின் தேர்தல் விளம்பரத்துக்கு பயன்படுத்த பல்வேறு நபர்களிடம் இருந்து புகைப்படங்கள் வந்தது. அந்த படங்களை விட உங்கள் படம் நன்றாக இருப்பதாக எங்கள் குழுவினர் கருதுகின்றனர். உங்களுக்கும் நல்ல விளம்பரம் கிடைக்கும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேளுங்கள்' என்று சொன்னார்.
அவர் சொன்னபடியே சம்பந்தப்பட்ட புகைப்படக்காரருக்கு கடிதம் அனுப்பினர்கள். கடித்தைப் படித்ததும், அவர் 'எனக்கு சம்மதம். நான் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார். உடன் 'நீங்கள் உங்கள் படத்தை பயன்படுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுங்கள். இப்போது நேரம் குறைவாக இருப்பதால், உங்களுக்கு கிரிடிட் கொடுக்க முடியவில்லை. அடுத்து பிரிண்ட் செய்யும் போது, உங்களுக்கு கிரிடிட் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அவரும் அனுமதி கடிதம் கொடுத்தார்.
ஒரு பைசா செலவில்லாமல், பிரச்சனையும் இல்லாமல் அந்த படத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இதற்கு அவர் சரியான நேரத்தில் சொன்ன யோசனைதான் காரணம். இதில் இருந்து தெரிவது என்னவென்றால், சொல்லும் விதத்தில் சொன்னால் யாரையும் எளிதில் சம்மதிக்க வைக்க முடியும் என்பதுதான்.

Sunday, January 13, 2008

மும்பையும்... புத்தாண்டு கொண்டாட்டமும்...

புத்தாண்டு அன்று மும்பையில் நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், அதிர்ந்து போனேன்...
சமீபத்தில்தான் மும்பை செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மும்பை டான்கள் பற்றியும், தாவூத் இப்றாஹிம் பற்றியுமே கேள்விப்பட்ட எனக்கு, இன்னொரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நான் ஒரு மாலை பொழுதில்தான் மும்பை சென்று சேர்ந்தேன். மும்பையில் யாரையும் எனக்குத் தெரியாது. சென்னையில் உள்ள நண்பர் ஒருவர் மூலமாக, மும்பையில் உள்ள பத்திரிகையாளர் அர்ஜூனை தொடர்பு கொண்டேன். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 20 வருடங்கள் அங்கு பத்திரிகையில் இருக்கிறார். அவருடன் ஷாப்பிக் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், அந்த நண்பரை நீண்ட நேரம் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியாக இரவு பத்து மணிக்குத்தான் அவரை சந்திக்க முடிந்தது.
அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் என்னை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். பக்ரித் பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்த நேரம் என்பதால், முஸ்லிம்கள் மார்க்கெட் ஒன்று இருக்கிறது. அங்கு சகலத்தையும் நீங்கள் இந்த நேரத்தில் வாங்கலாம் என்று என்னை அழைத்துச் சென்றார். தாராவியில் இருந்து நாங்கள் அந்த மார்க்கெட்டுக்கு சென்றோம்.
இரவு நேரம் என்பதால், எந்த பாதை என்பது எனக்கு தெரியல்வில்லை. ஆனாலும் அவர் அழைத்துச் சென்ற போது, நள்ளிரவை நெருங்கிக் கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் பேருந்து நிலையங்களில் பெண்கள் தன்னந்தனியாக பேருந்துக்காக காத்துக் கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். இந்த நேரத்தில் பெண்கள் தனியாக இருக்கிறார்களே... தாதாக்கள் ரவுடிகள் நிறைந்த இந்த ஊரில் இவர்களுக்கு பிரச்சனை எதுவும் ஏற்படாதா...
எனக்குள் தோன்றிய கேள்வியை அர்ஜுனிடம் கேட்டேன். அவர் சிரித்தார்... "இங்கே இது சகஜம்... இங்கேயாவது ஒருவர் இருவர்தான் நிற்கிறார்கள். ரயில் நிலையத்தில் பாருங்கள் எவ்வளவு பேர் தனியாக இருக்கிறார்கள் என்று... யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது" என்றார்.
"எப்படி இது சாத்தியம்..."
"இங்கே செக்ஸ் தொழிலாளர்களுக்கென தனியாக இடம் இருக்கிறது. அங்கே விபச்சாரம் அங்கிகரிக்கப்பட்ட தொழிலாக உள்ளது. இங்குள்ள தாதாக்கள், காமமூகர்கள் தாங்கள் தாகத்தை அங்கு சென்று தணித்துக் கொள்கிறார்கள். இதனால் பொது இடங்களில் பெண்கள் சாதாரணமாக நடனமாட முடிகிறது"
நான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் போது இரவு 2 மணி. ரயிலில் பெண்கள் தனியாக வந்து போவதையும் பார்க்க முடிந்தது. அப்போது என் மனதில் தோன்றியது இதுதான். நள்ளிரவில் ஒரு பெண் தன்னந்தனியாக உடல் முழுவதும் நகைகளுடன் செல்கிறாளோ... அன்றைக்குத்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று காந்தி சொன்ன சுதந்திரம் மும்பைக்கு வந்துவிட்டது. சென்னைக்கு எப்போது வரும் என்று ஏக்கத்துடன் சென்னை திரும்பினேன்.
அன்றைக்கு நான் நினைத்தது தவறோ என்று நினைக்கும் அளவுக்கு புத்தாண்டு அன்று மும்பையி்ல் அந்த சம்பவம் நடந்துவிட்டது. புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மிருகத்தனமாக இரண்டு இளம் பெண்களை 80 பேர் சேர்ந்து படுத்திய கொடுமையை என்னவென்று சொல்லுவது. அப்பப்பா... நினைக்கவே நெஞ்சு வெடிக்கிறது. பாவம் அந்த பெண்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்... நாம் மீண்டும் காட்டு்மிராண்டி காலத்துக்கு சென்று கொண்டு இருக்கி்றோமோ என்று நினைக்கத் தூண்டுகிறது.
முக்கை தொடாத வரையில்தான் சுதந்திரம் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை என்றால் தெரிந்து கொள்ள வேண்டியது வரும்.

Saturday, September 15, 2007

புதிய கோணத்தில் யோசியுங்கள்


எல்லோருமே நாம் கவனிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே பெரிய கூட்டங்களில் கூட கவனிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படி மரியாதை கிடைக்கிறது என்று நினைத்து பொறாமைப்படுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். நாமும் கவனிக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்வது?
என்னுடைய நண்பர் ஹரி, தற்போது உதவி இயக்குநராக இருக்கிறார். அவரிடம் கதைகளைப் பற்றி பேசும் போது, அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தை, அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்பதை பார்வையாளர்கள் யூகித்துவிடக் கூடாது. அவர்கள் என்ன யூகிப்பார்கள் என்பதை யோசித்து, அது அல்லாத ஒரு காட்சியை வைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்பார். இது எவ்வளவு பெரிய உண்மை தெரியுமா? சினிமாவில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் மற்றவர்கள் நினைப்பதை விட வித்தியாசமாக யோசித்தவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.
மாவீரன் அலெக்ஸாண்டர் புகழ் பெற்ற கோர்டியமில் நகரில் கால் வைத்தான், தனது படைகளுடன். அந்த நகரை உருவாக்கிய மன்னன் ஒருவர் தேர் ஒன்றை மரம் ஒன்றில் மிக இருக்கமாக கட்டி வைட்த்திருந்தார். அந்த கயிற்றை அவிழ்ப்பவர் யோரோ அவர்தா ஆசிய கண்டத்தை வெற்றி கொள்ள முடியும் என்று அந்த நகர மக்கள் நம்பினார்கள். அந்த நகர மக்களின் நம்பிக்கையைப் பற்றி படை வீரர்கள் அலெக்சாண்டரிடம் சொன்னார்கள். உடன் அவரும் அதை பார்க்க விரும்பினார். அவரை அங்கு அழைத்துச் சென்றனர்.
அவரும் கடுமையாக முயற்சித்தார். முடிச்சு இருக்கமாக இருந்ததால், அவிழ்க்க முடியவில்லை. திடீரென ஏதோ தோன்றியவராக எழுந்தார். விருட்டென உடைவாளை உருவினார். அந்த முடிச்சை நிமிடத்தில் அறுத்தார். சில விநாடிகளில் முடிச்சு அவிழ்ந்தது. அவர் படைகளுடம் நகருக்குள் போனார். பல தேசங்களை வென்றார். இன்றும் சரித்திரத்தில் அவர் வெற்றி பெற்ற மனிதனாக இருக்கிறார்.
இப்படித்தான் எல்லோரும் ஒரு வழியை யோசித்தால், நீங்கள் அவர்களில் இருந்து மாறுபட்டு யோசியுங்கள். நிச்சயம் நீங்கள் வெற்றிப் பெறலாம். எல்லோராலும் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள். வெற்றி பெற்றவன் சொல்லுவதுதான் வேதம். எல்லோரும் லெப்ட் ரைட் என்று நடந்தால், நீங்கள் ரைட் லெப்ட் என்று நடங்கள் அத்தனை கூட்டத்திலும் நீங்கள் வேறுபட்டு நிற்பீர்கள். வெற்றி உங்கள் வசப்படும்.

Thursday, May 03, 2007

நண்பனும் கவிதையும்...



இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 18 வருடம் எனக்கும் ஏக்நாத்துக்குமான நட்பு நீடித்துக் கொண்டே இருக்கிறது. முதலில் அவனை பார்க்கும் போது இருந்த ஈர்ப்பும், பிரமிப்பும் இப்போதும் தொடர்கிறது.
கவிதை மூலம் எனக்கு அறிமுகமானவன், ஏக்நாத். நானும் அவனும் ஓரே கல்லூரியில், அவன் தமிழும், நான் கணிதமும் படித்தோம். இருவரும் ஓரே பஸில்தான் பயணம் செய்ய வேண்டும்.
எங்கள் எல்லோரையும் விட கலராகவும், அந்த நிறத்துக்கு ஏற்றார் போல உடைகளும் அணிந்து வருவான். பஸ்சில் வரும் பெண்கள் எல்லாம் அவனிடம் பேசவே ஆர்வம் காட்டுவார்கள். ஆழ்வார்குறிச்சியில் இருந்துதான் நிறைய பெண்கள் கல்லூரிக்கு வருவார்கள். அவர்கள் அனைவருமே அவனுடன் பள்ளியில் படித்தவர்கள் என்பது எனக்கு பின்னால்தான் தெரிய வந்தது.
அவனுடைய பெயரும், அவனுடைய நடவடிக்கைகளும் வித்தியாசமாக இருக்கும். ஆரம்ப நாட்களில் அவனிடம் அதிகம் பேசியது கிடையாது. ஒரு முறை வார மலரில் ஏக்நாத்தின் கவிதை ஒன்று வெளியாகி இருந்தது. பத்திரிகையில் பெயர் வந்தால் பெரிய விஷயமாக நினைத்த காலம் அது. கவிதையே வந்துவிட்டது என்றால் சொல்லவா வேண்டும். ஊரில் எல்லோரிடமும், என் கல்லூரியில் என்னுடன் படிக்கும் நண்பன்(அதுவரையில் அவனிடம் பேசியதே இல்லை) என்று தம்பட்டம் அடித்து பெருமை பட்டுக் கொண்டேன்.
அடுத்த நாள் கல்லூரிக்கு போகும் போது பஸ்சிலேயே கவிதை நன்றாக இருந்தது என்று பாராட்டினேன். அதுதான் நாங்கள் இருவரும் பேசிக் கொண்ட முதல் நிகழ்வு. அதற்கு பின்பு, எங்களின் நட்பு, பஸிலும், ஆற்றங்கரையிலும் செழித்து வளர்ந்தது.
நான் சென்னைக்கு வேலை கிடைத்து வந்துவிட்டேன். அப்போதும் எங்களின் நட்பு தொடர்ந்தது. பின்னர் அவன் நாகப்பட்டினத்தில் இறால் பண்ணையொன்றில் வேலை பார்த்து வந்தான். அங்கிருந்தபடியே கவிதை புத்தகம் ஒன்றை வெளியிட்டான். அதை எனக்கும் அனுப்பி வைத்தான்.
பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு, சேவியர் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் படிக்க சென்றான். அப்போதும் எனக்கு கடிதம் எழுதுவான். நான் ஊருக்கு செல்லும் போது, அவனை கண்டிப்பாக பார்த்துவிட்டு வருவேன்.அவன் படித்து முடித்ததும், சென்னையில் வேலை தேடி வருகிறேன் என்று சொன்னான். நான் என்னோடு தங்கிக் கொள் என்று அழைத்து வந்தேன். அவன் வேலையில்லாமல் கஷ்டப்பட்ட போது இரண்டு பேரும், 5 ரூபாய்க்கு ரோட்டோர இட்லி கடையில் சாப்பிட்டு பொழுதை கழித்து, இன்று இருவரும் நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்க்கிறோம்.
ஓரே அறையில் இருந்த போது, அவன் எழுதிய பல கவிதைகளுக்கு முதல் வாசகனாக நான் இருந்திருக்கிறேன். இப்போதும் அவன் சினிமாவில் பாட்டு எழுதியதும், அவ்வப்போது முழுப்பாடலையும் சொல்லி மகிழ்வான். அவனுடைய கவிதைகளில் எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதில் ஒரு கவிதை என்னால் மறக்கவே முடியாது. நீங்கள் படித்தால் நீங்களும் மறக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.
அந்த கவிதை...
உன் சாயலில் இருக்கும் எல்லா
பெண்களிடமும் பேசிவிடுகிறேன்...
ஆழ்வார்குறிச்சி தேரோட்டத்தில்
உன்னைப் போலவே தெரிந்த பெண்ணிடம்
பேச நினைக்கையில்...
அது நீயாகவே இருந்தாய்
பேசாமலெயே திரும்பினேன்...
அவன் அனுபவித்து எழுதிய கவிதையை நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Sunday, February 11, 2007

கருணாநிதியும்... விஜயகுமாரும்...



காவல்துறை அதிகாரிகளில் விஜயகுமாருக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு.
விரப்பனை அவர் சுட்டுக் கொன்றார் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. அவருடைய கம்பிரமும், எதையும் சரியாக செய்யும் தனித்தன்மையும் ஆளுமையும் மற்றவர்களை அவர் பக்கம் ஈர்க்கும்.
அவருடைய வெற்றிகள் பற்றி நான் பல முறை வியந்து பார்த்திருக்கிறேன். இவரால் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது என்று நினைத்திருக்கிறேன்.
2001ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதியை பேட்டியெடுக்க சிஐடி நகர் வீட்டுக்கு சென்றிருந்தேன். பேட்டி முடிந்ததும் நாட்டு நடப்புப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது, வெங்கடேசபண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட நேரம். அந்த சூடு தணியாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது. இந்த விஷயத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமாருக்கு கெட்ட பெயர் வர ஆரம்பித்த நேரம். அவரை மாற்ற வேண்டும் என்று நாடார் அமைப்புகள் எல்லாம் கோரிக்கை வைத்திருந்தார்கள்.
எங்களுடைய பேச்சு வெங்கடேசப்பண்ணையாரைப் பற்றியும், தென் மாவட்டங்களில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். நானும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால், கருணாநிதி ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் இருந்தது.
வெங்கடேசப்பண்ணையார் என்கவுண்டர் விஷயத்தில் கமிஷனர் விஜயகுமார் தவறு செய்துவிட்டார் என்று நான் சொன்னேன். விஜயகுமார் பற்றி சொன்னதும், கருணாநிதி ஒரு விஷயத்தை நினைவுபடுத்தி சொன்னார்.
''அந்தம்மாக்கிட்ட அவர் செக்யூரிட்டி ஆபிசரா 91-96 வரை இருந்தார். 96ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், அவருக்கு தென் மண்டல ஐஜி பதவி கொடுத்தேன். அவரும் சிறப்பாக பணியாற்றினார். ஆனால், சில மாதங்களில் பாடர் செக்யூரிட்டி போர்சுக்கு போக அனுமதி கேட்டு என்னை சந்தித்தார். நானும் அனுப்பி வைக்க சம்மதித்தேன்.
தமிழகத்தில் இருந்து அவர் டெல்லி செல்வதற்கு முன் என்னை சந்திக்க வந்தார். 'நான் சில காலம் அவர்களிடம் பாதுகாப்பு அதிகாரியா இருந்தேன். இப்ப டெல்லி போறதுக்கு முன்னாடி அவங்களை சந்திச்சு சொல்லிட்டு போகனுமுன்னு நினைக்கிறேன். நீங்க அனுமதி கொடுக்கனும்' என்று கேட்டார். நானும் தாராளமா போயிட்டு வாங்கன்னு சொன்னேன். அந்த அம்மையாரை பார்த்துட்டுத்தான் டெல்லி போனார்.
அவர் திரும்பவும் சென்னை போலீஸ் கமிஷனரா வந்ததும், மறக்காம எனக்கு போன் செய்தார். 'நான் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரா பதவி ஏற்க போறேன். உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்' என்று கேட்டார். இத்தனை நேர்மையான அதிகாரியை பார்க்க முடியாது என்று மனசு விட்டு பாராட்டினார். விரப்பனை சுட்ட உடன் கருணாநிதிக்கு போன் செய்து தகவல் சொன்னார் என்றும் சொல்லுவார்கள்.
ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அதிகாரி என்பதால், அவருக்கு திமுக அரசில் நல்ல பொறுப்பு கிடைக்காது என்ற கருத்து உள்ளது. இப்போது கூட அவர் சட்டம் ஒழுங்கு தொடர்பான எந்த பணியிலும் இல்லை.
இரண்டு பெரிய தலைவர்களிடமும் நல்ல பெயரோடு இருக்க ஒருவரால் முடியும் என்றால், அது அவரது நேர்மையால் கிடைத்த வெற்ற்றியாகத்தான் இருக்க முடியும்.
குறிப்பு
தமிழகத்தில் ஆண்டுதோறும் எந்த பதவிக்கும் தகுதியானவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்படுவது உண்டு. ஏனெனில் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வந்துவிடும். இது போன்ற பட்டியலில் கடந்த 2005ம் ஆண்டு 25 போலீஸ் அதிகாரிகள் இருந்தனர். 2006ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 11ஆக குறைந்து போய்விட்டது. இந்த ஆண்டு எவ்வள்வு குறைகிறதோ தெரியவில்லை.

Sunday, January 28, 2007

பட்டிக்காட்டாணின் பட்டணத்து அனுபவம் 1

எனது சொந்த ஊர் மைலப்பபுரம் என்ற குக்கிராமம். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் பாவூர்சத்திரத்துக்கும் கடையத்துக்கும் செல்லும் வழியில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. படித்தது வளர்ந்தது எல்லாம் அந்த கிரம சூழ்நிலையில்தான். சென்னைக்கு நான் 1993ம் ஆண்டு தினகரனில் வேலை கிடைத்து வந்தேன்.
மிகவும் சந்தோஷமாக வண்ணவண்ண கனவுகளோடு சென்னைக்கு வந்தேன். சென்னை எனக்கு பல உண்மைகளை கற்றுக் கொடுத்தது. முதல் அனுபவமே எனக்கு அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியது.
கிராமத்தில் பிறந்ததால், யார் வீட்டுக்குப் போனாலும் தண்ணீர் தருவார்கள். எங்கே சென்றாலும் தண்ணீரை தானமாக தருவார்கள். தண்ணீர் பந்தல் என்று சாலை ஓரமாக மண் பானையில் வைத்திருப்பார்கள்.அதனால்தான் கிராமத்தில் பணத்தை தண்ணி மாதிரி செல்வு பண்ணாத என்பார்கள்.
எனக்கு முதல் அனுபவம் தண்ணியில்தான்.
நீங்கள் நினைப்பது போல டாஸ்மாக் தண்ணீயில் இல்லை. குடி நீரில்.
என்னை முதன்முதலில் செய்தி சேகரிக்க அனுப்புவதற்கு முன்பு பயிற்சிக்காக மூத்த நிருபர்களுடன் சென்று அந்த பகுதிகளை பார்த்துவிட்டு வருமாறு சொல்வார்கள். ஒரு நிருபர் என்னை பஸ்சில் வருமாறு சொல்லிவிட்டு போய்விட்டார்.
நானும் மயிலாப்பூர் டேங்க் அருகில் பஸ்க்காக காத்திருந்தேன். அலுவலகத்தில் நடந்து வந்ததால், தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க நினைத்து பக்கத்தில் இருந்த கடையில் தண்ணீர் கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்தார், கடைக்காரர். என்னுடைய வார்த்தைகளை வைத்து நம்மூர்காரன் என்று நினைத்தாரா என்ன என்பது எனக்குத் தெரியாது. ஒரு பாக்கெட்டில் தண்ணீர் கொடுத்தார். என்னக்கு ஓரே ஆச்சரியம். நம்ம ஊரில் தம்ளரில் தண்ணீர் தருவார்கள். இவர்கள் பாக்கெட்டில் தருகிறார்களே என்று. சுத்தமாக இருக்கட்டும் என்று தருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். தண்ணீரை குடித்துவிட்டு, அப்படியே கிள்ம்பினேன்.
கடைகாரர், "தம்பி தண்ணீருக்கு காசு கொண்டுங்க" என்றார்
எனக்கு தூக்கிவாரி போட்டது. தண்ணீருக்கு காசா. நான் முழிப்பதை பார்த்ததும் 'ஒரு பாக்கெட் தண்ணீர் ஒரு ரூபாய்' என்று சொன்னார்.
எனக்கு கிராமத்து நினைவு வந்தது.
சின்ன கிராமம் என்றாலும் குடிநீருக்கு கோடை காலத்தில் எங்கள் ஊரில் சிரமப்பட வேண்டியதிருக்கும். நான் கல்லூரி படிக்கும் காலத்தில் தண்ணீருக்காக கிணறு கிணறாக அலைந்திருக்கிறேன்.
எங்கள் ஊரில் நல்ல டேஸ்டான தண்ணீர் செல்வின் என்பவர் குடும்பது கிணற்றில் கிடைக்கும். அவர் எனக்கு தாத்தா முறை. அவர் தீவிர அதிமுககாரர். அவருடைய தந்தையும் என்னுடைய தந்தையும் நெருங்கிய நண்பர்கள். அதனால் எங்கள் இருவர் குடும்பத்துக்கும் அவரது குடும்பத்துக்கும் நெருங்கைய தொடர்பு உண்டு.
அவர்கள் கிணற்றில் நல்ல தண்ணீர் எடுக்க ஊரே போகும். கோடை காலம் வந்துவிட்டால், அவர்கள் பயிருக்கு தண்ணீர் கொடுக்க முடியாத அளவிற்கு ஊர்காரர்கள் தண்ணீரை வழித்து எடுத்துச் சென்றுவிடுவார்கள். இவர்களை கட்டுப்படுத்த வழியை அடைத்துப் பார்த்தார்கள். காவலுக்கு இருந்து பார்த்தார்கள். திட்டிப்பார்த்தார்கள். உஷும். பலனில்லை. கடைசியாக ஒரு வழியை கண்டுபிடித்தார்கள்.
ஒரு குடம் தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால், 25 பைசா தரவேண்டும் என்று சொல்லி வசூலிக்க ஆரம்பித்தார்கள். இந்த திட்டத்துக்கு கைமேல் பலன் கிடைத்தது. காசு கொடுத்து யாரும் தண்ணீர் எடுக்க தயாராக இல்லை.
கோடை காலம் முடிந்தது. தண்ணீர் பெருகியதும் காசு வசூலிப்பதை விட்டுவிட்டார்கள்.
சில வருடங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் வந்தது. தேர்தலில் செல்வின் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டார். உள்ளூர்காரரான எனக்கு நீங்கள் ஒட்டுப்போடுங்கள் என்று வீடு வீடாக சென்று கேட்டார். ஊர்காரர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக அவரை புறக்கணிக்க முடிவு செய்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்... குடிக்கிற தண்ணீருக்கே காசு கேட்டவனுக்கு எப்படி ஓட்டுப் போட முடியும் ... என்பதுதான்.
தேர்தலில் அவர் தோற்றுப் போனார். வடமலைப்பட்டியைச் சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவர் ஜெயித்தார். அவர் என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர்.
தண்ணீர் பாக்கெட்டுக்கு காசு கொடுத்த போது, செல்வின் ஞாபகம் தானாகவே எனக்கு வந்தது. ஒரு குடம் தண்ணீருக்கு 25 காசுக்கே இத்தனை பிரச்சனை செய்தார்கள். இங்கே 100மில்லி தண்ணீருக்கே ஒரு ரூபாய் கேட்கிறார்களே என்று தோன்றியது. தண்ணீருக்கு காசு கேட்கும் இந்த ஊரை விட்டுவிட்டு கிராமத்துக்கே போய்விடலாம் என்று தோன்றியது.காலம் ஓடிவிட்டது. பத்தாண்டுக்கு பிறகு ஊருக்கு போன போது சொன்னார்கள்... "பண்ணத்தை தண்ணீ மாதிரி பாத்து செல்வு பண்ணு." இனி ஒருவேளை செல்வின் பஞ்சாயத்து தலைவராகலாம். அப்போது தண்ணீர் ஒரு பிரச்சனையாக இருக்காது என்று எனக்குத் தோன்றியது.